தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு - ராணுவ உயர் அதிகாரி தகவல்

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தென்பிராந்திய ராணுவ தளபதி தெரிவித்தார்.

Update: 2019-09-09 10:58 GMT
புனே,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயத்தில், இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்ட சில பயங்கரவாதிகள், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பிடிபட்டுள்ளனர்.

இந்த பின்னணியில், மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ராணுவ சட்டக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தென்பிராந்திய ராணுவ தளபதி எஸ்.கே.சைனி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தென்னிந்தியாவிலும், தீபகற்ப இந்தியாவிலும் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக எங்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

எதிரிகள் மற்றும் பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவர்கள் விருப்பம் எதுவும் வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

குஜராத் மாநிலம் சர் கிரீக் பகுதியில், கேட்பாரற்ற நிலையில் சில படகுகள் சிக்கி உள்ளன. அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, அங்கு படைகளை அதிக அளவில் குவித்துள்ளோம்.

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் எந்த மோதலும் உட்புற பரிமாணம் மற்றும் வெளிப்புற பரிமாணத்தை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு மோதலுக்கும், மத்திய அரசு விரிவான அணுகுமுறையை மேற்கொள்கிறது. அரசியல், பொருளாதார, சமூக, ராஜ்யரீதியான நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்கிறது. மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது ராணுவத்தின் வேலையாக உள்ளது.

காஷ்மீரை பொறுத்தவரை எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள ராணுவம் முற்றிலும் தயார்நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும், அந்நாட்டு ராணுவ தலைமையும் விடுத்து வரும் மிரட்டல்கள், எங்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது. எந்த சவாலையும் முறியடிக்க தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்