பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை; கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரம்

ராணுவத்தின் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2019-09-09 12:38 GMT
திருவனந்தபுரம்,

இந்தியாவுக்குள் கட்ச் பகுதியில் கடல்வழியாக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என உளவு அமைப்பு தகவல் தெரிவித்தது.  இந்த நிலையில், குஜராத்தின் சர்க் கிரீக் பகுதியில் 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டன.

இதனால் நீருக்குள் இருந்து கொண்டு தாக்குதல்களை நடத்த கூடிய வகையிலான பயிற்சியை பெற்ற பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்க கூடும் என கூறப்பட்டது.  இது வழக்கம்போல் நடைபெறும் விசயம் என்றாலும், அனைத்து துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்ற தகவல் கிடைத்து உள்ளது என தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி இன்று கூறியுள்ளார்.

மேற்கிந்திய பகுதிகளிலோ, தென்னிந்திய பகுதிகளிலோ பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.  பயங்கரவாத செயல்கள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ராணுவத்தின் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹேரா பிறப்பித்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தும்படி, மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்