ஆந்திர பிரதேசம்: பைக் திருட்டு கும்பல் கைது, 130 வாகனங்கள் மீட்பு

ஆந்திர பிரதேசத்தில் நீண்ட காலமாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Update: 2019-09-13 08:25 GMT
ஹைதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் நீண்ட காலமாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கிய குற்றவாளி வீரய்யா சௌத்ரி என்பவனை அவனது கும்பலோடு ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 130 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் ஆர்.கே.மீனா, “கைது செய்யப்பட்ட வீரய்யா சௌத்ரி  2002 ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன் இதுவரை 5 முறை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை இவரிடமிருந்து 118 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளில் இவர் வாகனங்களை திருடியுள்ளார். இந்த முறை இவரிடம் இருந்து 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள வீரய்யா சௌத்ரி, விசாகப்பட்டினம் மாவட்டம் பரவாடா பகுதியைச் சேர்ந்தவன் ஆவான். அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளான். வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை போலியான சாவிகளை பயன்படுத்தி இவன் திருடியது தெரிய வந்துள்ளது.

வாகனங்கள் மட்டுமின்றி ரூ.90,000 பணமும், ரூ.5,00,000 மதிப்புள்ள நில ஆவணங்களும் வீரய்யா சௌத்ரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வீரய்யா சௌத்ரியுடன் இணைந்து திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்த 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்