ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்-மந்திரிக்கு தேர்தல் கமிஷன் சலுகை

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்-மந்திரிக்கு தேர்தல் கமிஷன் சலுகை வழங்கி உள்ளது.

Update: 2019-09-29 22:13 GMT
புதுடெல்லி,

சிக்கிம் மாநில முதல்-மந்திரி பிரேம்சிங் தமங், கடந்த 1990-களில் அம்மாநிலத்தில் கால்நடைத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, பசு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக அவர் மீது 2003-ம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தகுதி இழப்பு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி தொடங்கிய தகுதி இழப்பு காலம், 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதிதான் முடிவடைய இருந்தது.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், தமங்கின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பெரும்பான்மை பெற்றதால், தமங், மே 27-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். தேர்தலில் போட்டியிடாத அவர், 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆனால்தான், முதல்-மந்திரியாக நீடிக்க முடியும்.

இதற்கிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை பயன்படுத்தி, தனது தகுதி இழப்பு காலத்தை குறைக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு தமங் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, தகுதி இழப்பு காலத்தை ஒரு வருடம், ஒரு மாதமாக தேர்தல் கமிஷன் நேற்று குறைத்தது. இதன்படி, தகுதி இழப்பு காலம், கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, அவர் தேர்தலில் போட்டியிட்டு, முதல்-மந்திரி பதவியை தக்க வைத்துக்கொள்ள வழி பிறந்துள்ளது.

மேலும் செய்திகள்