அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்

அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடங்குகிறது.

Update: 2019-10-14 02:49 GMT
புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட்  6 ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. வரும் 17 ஆம் தேதிக்குள் இறுதி வாதங்கள் நிறைவடைந்துவிடும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. 

தீர்ப்பு எழுதுவதற்கு, நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கும் வகையில், ஒரு வார தசரா விடுமுறை முடிந்து, இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது.  இதற்கிடையே, அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்