ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு புகார்: ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் - அமலாக்கத்துறை காவலில் இருப்பதால் விடுதலை ஆவதில் சிக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Update: 2019-10-23 00:15 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, ப.சிதம்பரம் நிதி மந்திரி பதவி வகித்தார்.

2007-ம் ஆண்டில், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, தற்போது விவாகரத்து செய்து விட்ட அவரது முன்னாள் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) அனுமதியை ப.சிதம்பரம் பெற்றுத்தந்தார் என புகார் எழுந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து செயல்பட்டு, பெருந்தொகையை லஞ்சமாக பெற்றார் என்றும் கூறப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார்.

ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. காவலில் வைத்து முதலில் விசாரிக்கப்பட்ட அவர், பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் கெயிட், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ப.சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.

சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் டெல்லி தனிக்கோர்ட்டில் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. வேறு எந்த வழக்கிலும் அவர் தேவைப்படவில்லை என்றால் அவரை ஜாமீனில் விடுவித்து விடலாம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ப.சிதம்பரமும், 2 ஜாமீன்தாரர்களும் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதியின் திருப்திக்கு ஏற்ப தலா ரூ.1 லட்சம் பிணைப்பத்திரம் எழுதித்தர வேண்டும்.

* ப.சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை ஏற்கனவே டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஒப்படைக்காமல் இருந்தால், அதை ஒப்படைத்து விட வேண்டும்.

* சி.பி.ஐ. தனிக்கோர்ட்டின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. இந்த விஷயத்தில் தனிக்கோர்ட்டு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவின்படி அவர் நடந்து கொள்ள வேண்டும்.

* தேவைப்படுகிறபோதெல்லாம் சி.பி.ஐ. முன் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

ஜாமீன் மனு விசாரணையின்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பொருளாதார குற்ற வழக்கில் தொடர்பு உடையவர்கள் எல்லாம் நாட்டை விட்டு தப்பி ஓடும் விவகாரத்தை எழுப்பி, தெரிவித்த கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டு ஏற்காமல் இப்போது நிராகரித்து விட்டது.

இதுபற்றி நீதிபதிகள், “இந்த கட்டத்தில், பொருளாதார குற்றவாளிகள் அனைவரும் நாட்டை விட்டு பறந்து சென்றுவிடுவார்கள் என்பதை தேசிய நிகழ்வாக பார்க்க வேண்டும், அந்த வகையிலேயே கையாளப்பட வேண்டும் என்ற சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை குறிக்க வேண்டியது அவசியம்” என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சிலர் நாட்டை விட்டு ஓடி உள்ள நிலையில், அதே கோணத்தில் இந்த வழக்கிலும் பார்க்க இயலாது, இந்த வழக்கை பொறுத்தமட்டில் அதன் தகுதியின் அடிப்படையில்தான் ஜாமீன் பெறுகிற உரிமை உள்ளதா என்றே பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்துள்ள ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிவிட்டாலும், அவர் உடனே ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை உள்ளது.

ஏனென்றால், இந்த முறைகேட்டில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 16-ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 24-ந் தேதி (நாளை) வரை அமலாக்கப்பிரிவின் காவலில் வைத்து விசாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

எனவே அமலாக்கப்பிரிவு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றால்தான் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்