காஷ்மீர் பிரச்சினையை வேண்டுமென்றே சர்வதேசமயமாக்கி விட்டது - மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்

ஐரோப்பிய எம்.பி.க்களை காஷ்மீரில் அனுமதித்தது, மிகப்பெரிய தவறு. காஷ்மீர் பிரச்சினையை வேண்டுமென்றே சர்வதேசமயமாக்கி விட்டது என்று மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

Update: 2019-10-30 21:30 GMT
புதுடெல்லி,

ஐரோப்பிய எம்.பி.க்களின் காஷ்மீர் பயணம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3 நாட்களாக, பா.ஜனதா அரசின் முதிர்ச்சியற்ற பொதுஜன தொடர்பு நடவடிக்கையை நாடு கண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து தனிப்பட்ட முறையில், அடையாளம் தெரியாத ஒரு சிந்தனைவாதி அமைப்பால் வரவழைக்கப்பட்ட 23 எம்.பி.க்கள், காஷ்மீருக்கு சென்றுள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவின் உள்விவகாரம், அதில், மூன்றாம் தரப்பின் தலையீட்டையோ, சமாதானத்தையோ ஏற்க மாட்டோம் என்பதுதான் கடந்த 72 ஆண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் கொள்கை. அந்த கொள்கையை கடந்த 3 நாட்களில் மோடி அரசு மீறிவிட்டது.

இதன்மூலம், வேண்டுமென்றே காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்கி விட்டது. இது, இந்திய சரித்திரத்தில் மிகப்பெரிய தவறு ஆகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், காஷ்மீர் தொடர்பான இறையாண்மை உரிமைக்கும் அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. கொடிய பாவத்தை மோடி அரசு செய்துள்ளது.

நமது இந்திய எம்.பி.க்கள், காஷ்மீருக்கு சென்றபோது, அவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்தை விட்டு வெளியேறவிடாமல் தடுத்ததுடன், அவர்கள் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், மூன்றாம் தரப்பான ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்வர வேண்டும்.

இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்த மடி சர்மா யார்? அவருக்கும், பா.ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? தனிப்பட்ட முறையிலான பயணத்துக்கு மத்திய அரசு சம்மதித்தது ஏன்? எந்த அந்தஸ்தில் பிரதமரை ஐரோப்பிய எம்.பி.க்கள் சந்திக்க மடி சர்மா ஏற்பாடு செய்தார்? காஷ்மீர் பயணத்துக்கான செலவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முற்றிலும் ஓரம்கட்டப்பட்டது ஏன்?

இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்