பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு 92-வது பிறந்தநாள்: பிரதமர் நேரில் வாழ்த்து

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 92-வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2019-11-08 06:58 GMT
புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு நேற்று 92-வது பிறந்தநாள். அவர் 1927-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர்.

அத்வானி நேற்று டெல்லியில் உள்ள இல்லத்தில் தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

அத்வானி இல்லத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார். பூங்கொத்து கொடுத்து அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அத்வானிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானி இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், அத்வானிக்கு புகழாரம் சூட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அறிஞர், அரசியல் மேதை, பெரிதும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர் என அத்வானி எப்போதும் மதிக்கப்படுவார். இந்திய அரசியலில் ஆளுமைமிக்க கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது என்றால், அதற்கு அத்வானி போன்ற தலைவர்களும், அவர் வளர்த்த செயல் வீரர்களும்தான் காரணம்.

அவர் பல ஆண்டுகளாக பாடுபட்டு பா.ஜனதாவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தார். அவர் எப்போதும் சித்தாந்தத்தில் சமரசம் செய்து கொண்டது இல்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்தபோது, அவர் முன்னணியில் நின்றார். மந்திரியாக இருந்தபோது, அவரது நிர்வாகத்திறன் பரவலாக பாராட்டப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்