கோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய பாதுகாப்பு மந்திரி

கோவாவில் மிக் ரக பயிற்சி விமான விபத்தில் இருந்து தப்பிய 2 விமானிகளிடம் மத்திய பாதுகாப்பு மந்திரி நலம் விசாரித்து உள்ளார்.

Update: 2019-11-16 10:40 GMT
பனாஜி,

கோவாவில் தபோலிம் நகர் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். ஹம்சா என்ற இந்திய கடற்படை தளத்தில் இருந்து மிக் 29கே ரக  பயிற்சி விமானம் ஒன்று இன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அதில், கேப்டன் எம். ஷியோகாண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் ஆகிய 2 விமானிகள் பயணித்துள்ளனர்.  வழக்கம்போல் பயிற்சி மேற்கொள்வதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்து உள்ளனர்.  இந்நிலையில் கிராமம் ஒன்றின் மீது பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விபத்திற்குள்ளானது.  எனினும் அதில் இருந்து 2 விமானிகளும் பாதுகாப்புடன் வெளியே குதித்து தப்பி விட்டனர்.

இதுபற்றிய விசாரணையில், விமானத்தின் வலது புற இயந்திரத்தில் பறவை மோதியுள்ளது என தெரிய வந்துள்ளது.  விமானம் திறந்தவெளி பகுதியில் விழுந்துள்ளது.  இதனால் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், கோவாவில் மிக் ரக பயிற்சி விமான விபத்தில் இருந்து தப்பிய 2 விமானிகளிடம் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நலம் விசாரித்து உள்ளார்.  அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இருவரும் சரியான நேரத்தில் விமானத்தில் இருந்து தப்பி விட்டனர்.  இருவரும் நலமுடன் உள்ளனர் என்று கிடைத்த தகவல் மிகுந்த திருப்தியளிக்க கூடியது.  அவர்கள் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் செய்திகள்