பெரும்பான்மையை நிரூபிக்க தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நவ.30 வரை அவகாசம்?

தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை வரும் 30 ஆம் தேதிக்குள் நிரூபிக்க ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Update: 2019-11-23 12:47 GMT
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந்தேதி வெளியான தேர்தல் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.  ஆனால், முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கூட்டணி உடைந்தது.  இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் கடந்த  12 ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இன்று உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக பதவியேற்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், திடீர் திருப்பமாக  மராட்டிய முதல்வராக  2-வது முறையாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர். அஜித் பவாரின் கருத்தில்,  தேசியவாத காங்கிரசுக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து பாஜகவை எதிர்கொள்வோம் என்று மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களும் அறிவித்தனர். குதிரை பேரத்தில் சிக்காமல் இருப்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களை ஜெய்பூரில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச்சென்றது. 

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தது,  மராட்டிய அரசியல் களத்தில் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வரும் நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது  அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை வரும் 30 ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று  ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தரப்பில்  அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

மேலும் செய்திகள்