துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி நிறுத்தி வைப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

மங்களூருவில் நடந்த கலவரத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு வழங்க இருந்த நிவாரண நிதியை நிறுத்தி வைப்பதாக, முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2019-12-25 09:41 GMT
பெங்களூரு,

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. கடந்த 19-ந்தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினரால் போராட்டம் நடந்தது. அப்போது திடீரென கலவரம் வெடித்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்துல் ஜலீல்(வயது 49), நவுசீன்(23) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான விளக்கம் அளித்தனர். அதில் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடுவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு அதற்காக கற்களை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்து சம்பவ இடத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு மங்களூருவில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கலவரம் குறித்தும், அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும், வீடியோக்கள் வெளியானது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம், “மங்களூரு கலவரம் திட்டமிட்ட சதி. அதுதொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கும், மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் மாநில அரசு சார்பில் ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்கப்படமாட்டாது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்