மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் தகவல்

இந்தியாவிலேயே மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

Update: 2019-12-27 00:15 GMT
புதுடெல்லி, 

தமிழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, வரும் பிப்ரவரி மாதம் 3 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய மந்திரிகள் பாராட்டி வருகின்றனர்.

தமிழக அரசின் சில துறைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங் களை சிறப்பாக அமல் படுத்தி வருவதற்காக மத்திய அரசின் விருதுகளை அள்ளிக்குவிக்கின்றன.

குறிப்பாக, தமிழக வேளாண்மைத் துறை கிருஷி கர்மான் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது. உள்ளாட்சித் துறை சமீபத்தில் மத்திய அரசின் 13 விருதுகளை வென்றது. இதுவரை உள்ளாட்சித் துறைக்கு பல்வேறு சிறப்பான செயல்பாட்டுக் காக 99 விருதுகள் கிடைத்துள்ளன.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக சுகா தாரத் துறையும், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மையுடன் செயல்படுவதற்காக சமூகநலத் துறையும் சமீபத்தில் மத்திய அரசின் விருதுகளை வென்றன. அந்தத் துறைகள் மட்டுமல்லாமல் தமிழக அரசின் மின்சார வாரியம், பள்ளிக்கல்வித் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை ஆகிய துறைகளும் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதுகளை வென்றுள்ளன.

இந்த நிலையில் தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு நல்லாட்சி வழங்கும் மாநிலங்களுக்கு புள்ளிகள் வழங்கி, அவற்றை வரிசைப் படுத்தி மத்திய அரசு, ஜி.ஜி.ஐ. (குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ்) என்ற பெயரில் பட்டியலிட்டுள்ளது. இதை, மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை மற்றும் நல்ல நிர்வாகத்துக்கான மையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இதற்காக நிபுணர் குழு அமைத்து, தேசிய அளவில் மத்திய அரசுத் துறைகளுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும், நிதி, சுற்றுச்சூழல், நிர்வாகம் ஆகியவை பற்றி தேசிய அளவிலான ஆலோசனையை நிபுணர் குழு மேற்கொண்டது. அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் துறைச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாட்டின் அனைத்து மாநிலங்களையும் பெரிய மாநிலங்கள் (ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்பட 18), வட கிழக்கு மற்றும் மலைபிரதேச மாநிலங்கள் (அருணாசல பிரதேசம், அசாம் உள்பட 11), யூனியன் பிரதேசங்கள் (டெல்லி, புதுச்சேரி உள்பட 7) என்று மத்திய அரசு வகைப்படுத்தியது.

நல்ல நிர்வாகத்தைத் தரும் மாநிலம் எது என்பதை கணக்கிடுவதற்கு முன்பு, வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய பிரிவுகள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவு, மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு, பொருளாதார மேலாண்மை, சமூகநலம் மற்றும் மேம்பாடு, நீதிநிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மக்களை மையப்படுத்தும் நிர்வாகம் ஆகிய 10 அம்சங்களில் அந்த மாநில அரசு எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு பட்டியலில் வரிசைப்படுத்தி உள்ளது.

வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய பிரிவில் தமிழகம் 9-வது இடத்தையும் (மத்திய பிரதேசம் முதல் இடம்), வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவில் 14-ம் இடத்தையும் (ஜார்கண்ட் முதல் இடம்), மனிதவள மேம்பாட்டில் 5-ம் இடத்தையும் (கோவா, புதுச்சேரி முதல் இடம்), பொது சுகாதாரத்தில் 2-ம் இடத்தையும் (கேரளா, புதுச்சேரி முதல் இடம்), பொது உள்கட்டமைப்பில் முதலிடத்தையும், பொருளாதார மேலாண்மையில் 5-ம் இடத்தையும் (கர்நாடகா முதல் இடம்),

சமூகநலன் மற்றும் மேம்பாட்டில் தமிழகம் 7-ம் இடத்தையும் (சத்தீஸ்கர் முதலிடம்), நீதிநிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில் முதல் இடத்தையும் (புதுச்சேரியும் முதல் இடம்), சுற்றுச்சூழலில் 3-ம் இடத்தையும் (மேற்கு வங்காளம் முதல் இடம்) பிடித்துள்ளது. தமிழகத்துக்கு 2 பிரிவுகளில் முதல் இடம் கிடைத்துள்ளது. அதாவது, பொது உள்கட்டமைப்பிலும், நீதிநிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பிலும் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது. இவற்றில் முறையே 0.74 மற்றும் 0.56 புள்ளிகளை தமிழகம் பெற்றுள்ளது.

இவற்றை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டதில், தமிழகம் 5.62 புள்ளிகள் வாங்கி முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மராட்டியம் (5.40), கர்நாடகம் (5.10) ஆகிய பெரிய மாநிலங்கள் வருகின்றன. பட்டியலை கடைசியில் இருந்து வாசித்தால் ஜார்கண்ட் (4.23), உத்தரபிரதேசம் (4.25), கோவா (4.29), பீகார் (4.40), ஒடிசா (4.44.) ஆகிய மாநிலங்கள் பரிதாப நிலையில் உள்ளன.

யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி 4.69 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் சண்டிகர், டெல்லி ஆகியவை வருகின்றன. 2.97 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள லட்சத்தீவுகள் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்