தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு ; உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் கைது

தெலுங்கானாவில் உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-01-18 10:09 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் காசிம். கடந்த 2015-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் முலுகு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பற்றிய விசாரணையில் காசிம் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்து உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  எனினும் அவரை கைது செய்வதற்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் கைது நடவடிக்கையை தடுத்ததற்காக 20 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி சித்திபேட்டை காவல் ஆணையாளர் ஜோயல் டேவிஸ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தேவையான சான்றுகள் எங்களுக்கு கிடைத்து உள்ளன. சமீபத்தில் சில ரகசிய தகவல்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன.

கைதுக்கான வாரண்ட் கிடைத்த நிலையில், இன்று காலை காசிம் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். மொபைல் போன்கள், பென் டிரைவ்கள், மாவோயிஸ்டு தலைவர்களுடனான கடித தொடர்புகள் உள்ளிட்ட சான்றுகளும் கிடைத்துள்ளன என அவர் கூறியுள்ளார்.

உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் காசிம், தொடர்ந்து மாவோயிஸ்டு தலைவர்களிடம் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்ற தகவல் எங்களிடம் உள்ளது.

தெலுங்கானாவிற்கான மாவோயிஸ்டுகளை வழிநடத்துபவராக இருந்து வந்ததுடன், நிதி சேகரிப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.  அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்வோம் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த வருடம், உஸ்மானியா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜெகன் என்பவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என கூறி அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று கடந்த 2018-ம் ஆண்டில், பீமா கோரேகாவன் வழக்கில் தெலுங்கு கவிஞரான வராவர ராவ் என்பவரை மராட்டிய போலீசார் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் இறுதி வரை, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் 12க்கும் மேற்பட்டோரை தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்