பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்

பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயமானது. இதனால் நீதிபதி வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Update: 2020-01-18 22:45 GMT
கான்பூர்,

40 ஆண்டுகளுக்கு முன்பு பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயமானது. இதனால் நீதிபதி வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பெஹ்மால் கிராமத்தில் 1981-ம் ஆண்டு கொள்ளைக் கும்பல் தலைவி பூலான்தேவி தனது ஆட்களுடன் சென்று தாகூர் சமுதாயத்தை சேர்ந்த 20 பேரை கொன்றார். பூலான்தேவியை தாகூர் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் கற்பழித்ததற்கு பழிவாங்குவதற்காக அவர் இந்த படுகொலையை நடத்தியதாக கூறப்பட்டது.

இந்த படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அன்றைய உத்தரபிரதேச முதல்-மந்திரி வி.பி.சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆரம்பத்தில் இந்த வழக்கில் பூலான்தேவி உள்பட 35 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டது. அதில் 8 பேர் பல்வேறு சம்பவங்களில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் 1983-ம் ஆண்டு பூலான்தேவி மத்தியபிரதேச போலீசாரிடம் சரண் அடைந்தார்.

11 ஆண்டுகள் சிறையில் கழித்த அவர் 1994-ம் ஆண்டு விடுதலையானார். தன் மீதுள்ள வழக்குகளை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி வந்தார். அதே சமயம் அரசியலில் இறங்கி எம்.பி. பதவியும் வகித்தார். 2001-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி டெல்லியில் அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.

2012-ம் ஆண்டு கான்பூரில் உள்ள கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் பெஹ்மால் படுகொலை வழக்கில் உயிரோடு இருக்கும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. போஷா, பிகா, விஸ்வநாத், ஷியாம்பாபு ஆகிய அந்த 4 பேரில் போஷா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற 3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுதிர்குமார் நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தார். கோர்ட்டில் விசாரணை தொடங்கியதும், வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்கள் மாயமாகி இருப்பதை நீதிபதி அறிந்தார். இதனால் கோர்ட்டு ஊழியருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வருகிற 24-ந் தேதி ஆவணங்களை கண்டுபிடித்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கு விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

அரசு வக்கீல் கூறும்போது, “கோர்ட்டு ஆவணங்களை கண்டுபிடித்த பின்னரே தீர்ப்பு வெளியிடும் தேதியை நீதிபதி அறிவிப்பார்” என்றார்.

மேலும் செய்திகள்