கட்சி சார்பின்றி அனைவருக்கும் உழைப்பேன்; அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

கட்சி சார்பின்றி அனைவருக்கும் உழைப்பேன் என டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்று கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Update: 2020-02-16 09:11 GMT
புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து, அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  டெல்லி துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா பதவியேற்றுக்கொண்டார்.  அவர்களை தொடர்ந்து  6 பேர் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.  அழைப்பு இல்லாததால் பதவியேற்பு விழாவில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் அவர் பேசும்பொழுது, தேர்தலில் சிலர் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர்.  சிலர் பா.ஜ.க.விற்கும் மற்றும் சிலர் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களித்தனர்...

ஆனால் இன்று, டெல்லி முதல் மந்திரியாக எப்பொழுது பதவியேற்று கொண்டேனோ, அதிலிருந்து அனைவருக்கும் உரிய முதல் மந்திரியாக நான் இருக்கிறேன்.  நான் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி, பா.ஜ.க.வின் முதல் மந்திரி, காங்கிரசின் முதல் மந்திரி மற்றும் பிற கட்சிகளின் முதல் மந்திரியாக இருக்கிறேன்.

கட்சிகளுடனான தொடர்பு, ஒவ்வொருவருக்காகவும் நான் பணியாற்றுவதில் இருந்து என்னை தடுத்து நிறுத்தவில்லை.  கட்சி சார்பின்றி அனைவருக்காகவும் உழைப்பேன் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்