வங்கிகள் விவசாய கடன் வழங்குவதை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கிறது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

வங்கிகள் விவசாய கடன் வழங்குவதை தீவிரமாக கண்காணிப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2020-02-16 21:15 GMT
புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைவதற்காக அடுத்த நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.1.6 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயிர்க்கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்க்கடன் வழங்குவது அந்தந்த பகுதிகளின் உள்ளூர் தேவையை பொறுத்தது என்பது எனக்கு தெரியும். தேவை அதிகரித்து பயிர்க்கடன் வழங்குவதில் இலக்கை அடைவோம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். வங்கிகளையும், அவைகளின் கடன் வழங்கும் செயல்பாடுகளையும் நான் கண்காணித்து வருகிறேன்.

குறிப்பாக கிராம பகுதிகளில் வங்கிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எனவே பயிர்க்கடன் வழங்குவதிலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதிலும் நாங்கள் இலக்கை அடைவோம் என நான் கருதுகிறேன்.

பொதுத் துறை வங்கிகளின் மெகா ஒருங்கிணைப்பு பிரச்சினை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையில் இருந்து பின்வாங்குவதற்கான காரணம் எதுவும் இல்லை. எந்த அறிவிப்புக்கும் தாமதமாவதற்கான காரணமும் எதுவும் இல்லை. அது நடைபெறும்போது உங்களுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்