சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்

சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-02-21 08:41 GMT
கோப்பு படம்
புதுடெல்லி

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவின் பொருளாதாரம்  கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. உலக நாடுகள் சீனாவிடம் இருந்து வாங்குவதையும், விற்பதையும் தற்போதைக்கு நிறுத்தியுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு  காரணமாக இந்தியாவில் கட்டுமானம், ஆட்டோ, ரசாயனங்கள் மற்றும் மருந்தியல் துறைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானம், போக்குவரத்து, ரசாயனங்கள் மற்றும் இயந்திர உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படக்கூடும், இருப்பினும் இந்தியாவின் வர்த்தகத்தில் கொரோனாவின் ஒட்டுமொத்த தாக்கம் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தனது மின் இயந்திரங்களில் 40 சதவீதம்  சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா தனது இயந்திரங்கள் மற்றும் இயந்திர சாதனங்களில் மூன்றில் ஒரு பகுதியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான  சீனா, கொரோனா வைரஸ் பாதிப்பால், தொழில், உற்பத்தி, வர்த்தகம் முடங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா  சீனாவை பெரிதும் நம்பியுள்ள ஐந்து இறக்குமதி பொருட்கள் - மின் இயந்திரங்கள்,  இயந்திர உபகரணங்கள், கரிம இரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் ஆப்டிகல் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் ஆகும். இதனால் இந்தியாவின் இறக்குமதி 28 சதவீதம் பாதிக்கப்படலாம்  என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் தொலைக்காட்சி  பேனல் உற்பத்தி  முடங்கியிருப்பதால், இந்தியாவில் தொலைக்காட்சிகளின்  விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.

விலை குறைவு என்பதால் சீனாவிலிருந்து பேனல்களை அதிகளவில் தொலைக்காட்சி  தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. கொரோனா வைரசால் அங்கு உற்பத்தி குறைந்து பேனல் விநியோகம் தடைபட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பேனல்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தொலைக்காட்சி பெட்டிகளின் விலையை உயர்த்த தொலைக்காட்சி  தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏசி, பிரிட்ஜ் சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்