டெல்லியில் மத்திய மந்திரியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

டெல்லியில் மத்திய மந்திரியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து, 11 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

Update: 2020-02-24 22:45 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ஊட்டி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய அரசு 60 சதவீத நிதி, மாநில அரசு 40 சதவீத நிதி என்ற விகிதாச்சார அடிப்படையில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.3,575 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் பங்கு ரூ.1,430 கோடி ஆகும்.

11 கல்லூரிகளுக்கும் ஒப்புதல் வழங்கியதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் விஜயபாஸ்கர் கூறுகையில், “ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் உத்தரவு பெற்று இருப்பது, தமிழக அரசுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மிகப்பெரிய திட்டம். அதற்கான சாலை வசதி, சுற்றுச்சுவர் போன்ற பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜைக்கா நிதி நிறுவனத்திடம் நிதியை பெறுவதற்காக மத்திய அரசின் ஆய்வுகள் 3 முறை முடிந்து விட்டன. எனவே, பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்