மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிப்பு

மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால் நாடு திரும்பிய 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிக்கிறார்கள்.

Update: 2020-03-18 00:15 GMT
புதுடெல்லி,

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன.

இந்தியாவில் நேற்று மேலும் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது.

இவர்களில் 22 பேர் வெளிநாட்டினர் ஆவர். பலியானோர் எண்ணிக்கையும் 3 ஆக உயர்ந்து விட்டது.

மாநிலங்களில் மராட்டிய மாநிலத்தில் அதிக அளவாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 24 பேரும், அரியானா மாநிலத்தில் 15 பேரும், கர்நாடக மாநிலத்தில் 8 பேரும், உத்தரபிரதேசத்தில் 13 பேரும், டெல்லியில் 7 பேரும், லடாக், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 4 பேரும், காஷ்மீரில் 3 பேரும், தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட 137 பேருடன் பழக்கம் வைத்திருந்த சுமார் 52 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து யாரும் இந்தியா வரக்கூடாது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளை அவர்கள் விமானம் ஏறும் இடத்திலேயே தடுத்து விடுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுபோல், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் இந்தியா வர மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது. இந்த தடை, 31-ந் தேதிவரை அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு நீட்டிப்பது பற்றி ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு இருப்பது, அங்குள்ள மாணவர்களை மிகவும் பாதித்து உள்ளது. பிலிப்பைன்சில் ஏராளமான இந்தியர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் அங்கு மருத்துவம் படித்து வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் அரசு எடுத்துவரும் முன்எச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து கல்லூரிகள் மூடப்பட்டதால் அங்கிருந்து 200 இந்திய மாணவர்கள் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்பட்டு உள்ளனர். இதில் 70 பேர் மாணவிகள் ஆவர்.

இவர்கள் வந்த விமானம் கோலாலம்பூர் வந்து சேர்ந்தபோது இந்தியா விதித்துள்ள தடை தெரியவந்தது. இதனால் அவர்கள் 200 பேரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழக மாணவர்கள் என்று தெரிகிறது.

நடுவழியில் இறக்கி விடப்பட்ட மாணவர்கள் மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல முடியாது. காரணம் அந்த நாடும் வெளிநாட்டில் இருந்து விமானங்களில் வர தடை விதித்துள்ளது.

இதனால் அங்கு தவித்து வரும் மாணவர்கள் தாங்கள் நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களை சந்தித்து இந்திய தூதரகத்தில் தங்கவைத்து உள்ளனர்.

என்றபோதிலும் மாணவர்கள் தாய்நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உத்தரபிரதேசத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுவது, ஏப்ரல் 2-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. போட்டி தேர்வுகளும், இதர தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டல் தொழிலுக்கு இழப்பீடு வழங்கும் கொள்கையை அறிமுகப்படுத்துமாறு நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்