மலேசியாவில் விமான நிலையத்தில் தவித்த 405 இந்தியர்கள் மீட்பு

மலேசியாவில் விமான நிலையத்தில் தவித்த 405 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். மேலும் ஈரானில் இருந்தும் 195 பேர் தாயகம் திரும்பினர்.

Update: 2020-03-18 16:32 GMT
கோலாலம்பூர்,

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. அந்தவகையில் மலேசியாவில் இருந்தும் வரும் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏராளமான மாணவர்கள் உள்பட இந்தியர் 405 பேர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்தனர்.

இவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த 405 பேரையும் மீட்டு வர சிறப்பு விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி ஏர்ஆசியா விமானங்கள் கோலாலம்பூர் சென்று 405 பேரையும் மீட்டு டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வந்தன.

இதைப்போல கொரோனா வைரஸ் பாதித்துள்ள ஈரானில் இருந்து இந்தியர்கள் மேலும் 195 பேர் நேற்று சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் அமைக்கப்பட்டு உள்ள ராணுவ நல்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்