கொரோனா வாழ்நாள் சவால்; புதுமையான தீர்வுகள் தேவை: பிரதமர் மோடி தகவல்

கொரோனா வாழ்நாள் சவால் என்றும் புதுமையான தீர்வுகள் தேவை என்றும் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-23 20:30 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியுடன் சில தொலைக்காட்சி பிரதிநிதிகள் காணொலி காட்சி மூலம் பேசினார்கள். அப்போது ஓய்வின்றி நாட்டுக்கு சேவை புரிந்துவரும் தொலைக்காட்சி நிருபர்கள், கேமராமேன்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின் பணிகளை பாராட்டிய பிரதமர் மோடி அவர்களிடம் கூறியதாவது:-

ஊடகங்கள் மக்களிடம் உள்ள கொரோனா வைரஸ் குறித்த அவநம்பிக்கைகள் மற்றும் பீதிக்கு எதிராக நேர்மறையான தகவல்களை ஒளிபரப்ப வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் வாழ்நாள் சவால். இதனை புதிய மற்றும் புதுமையான தீர்வுகள் மூலமே எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. இந்த தொற்றுநோயின் தீவிரம் பற்றி உணர்ந்துள்ளதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஊடகங்களுக்கு நன்றி. ஒரு நீண்ட போர் நமக்கு முன்னால் உள்ளது. சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும், சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய தகவல்களை சேனல்கள் மக்களுக்கு சுலபமாக புரிகிற மொழியில் கொண்டுசெல்ல வேண்டும். நிருபர்களுக்கு பேட்டியின்போது குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விடுவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட நீளமான மைக்குகளை செய்தி சேனல்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்