கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் சேவை புரிந்துவரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நடைபெற்றுவரும் போரில் மனிதநேயத்துடன் சேவை புரிந்து வரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2020-03-30 23:30 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் போரில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் முன்னிலையில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

அதேசமயம் சில சமூகநல அமைப்புகள் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது, உணவு, மருத்துவ வசதி போன்ற உதவிகளை செய்வது போன்ற பணிகளை செய்து வருகின்றன.

பிரதமர் நரேந்திரமோடி அப்படிப்பட்ட சில சமூகநல அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் நோயை எதிர்த்து ஒட்டுமொத்த தேசமும் அமைதியாகவும், மனஉறுதியுடனும் போராடி வருகிறது.

சமூகநல அமைப்புகளுக்கு மனிதநேயத்துடன் அணுகுவது, அதிகமானவர்களுக்கு சேவையாற்றுவது, மக்களுடன் இணைவது மற்றும் சேவை மனப்பான்மை ஆகிய 3 தனித்துவமான சிறப்புகள் உள்ளது. அதனால்தான் அவைகள் முழுமையாக நம்பப்படுகின்றன.

தேசம் இதுவரை சந்தித்திராத நெருக்கடியை சந்தித்துவரும் வேளையில் இந்த அமைப்புகளின் சேவை மற்றும் ஆதாரங்கள் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தேவைப்படுகிறது.

மூடநம்பிக்கைகள், நம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. நம்பிக்கைகள் என்ற பெயரில் மக்கள் சில இடங்களில் கூடுகிறார்கள், சமூக இடைவெளி விதிகளை மீறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து மேலும் பரப்புவதற்கான அவசியம் உள்ளது.

இந்த சவாலை சந்திக்க நமது தேசத்துக்கு குறுகியகால நடவடிக்கைகளும், நீண்டகால கண்ணோட்டமும் தேவைப்படுகிறது.

ஏழைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் சேவை செய்வதே தேசத்துக்கு சேவை செய்ய சிறந்த வழி என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

அதுபோல சமூகநல அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஏழைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது, மருத்துவ வசதிகள் அளிப்பது போன்ற உதவிகளை அர்ப்பணிப்புடன் செய்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமரும், மத்திய அரசும் எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்தனர். தாங்கள் செய்து வரும் சேவைகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்