காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் ஜூன் 30 வரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு

பிப்.1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-31 08:28 GMT
புதுடெல்லி,

கொரோனா  பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமங்கள், தகுதிச் சான்றிதழ் ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ''பிப்ரவரி 1 முதல் காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமம், பெர்மிட்டுகள் மற்றும் பதிவு போன்ற ஆவணங்கள் செல்லுபடி ஆகும் காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை   மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நீட்டித்துள்ளது.

நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான ஊரடங்கு மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்