கொரோனா பாதிப்பு காரணமாக ஈரானில் சிக்கி தவிக்கும் 250 இந்தியர்கள் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

கொரோனாவால் பாதிக் கப்பட்ட 250 இந்தியர்கள் ஈரானில் சிக்கி தவிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-01 23:15 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், அங்கு 250 இந்தியர்கள் சிக்கி தவிப்பது தெரியவந்து உள்ளது.

லடாக்கை சேர்ந்த முஸ்தபா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஈரானுக்கு கடந்த டிசம்பர் மாதம் புனித பயணமாக சென்ற ஆயிரம் பேருடன் தனது உறவினர்கள் சிலரும் சென்று இருப்பதாகவும் அவர்கள் அங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், எனவே அவர்களை மீட்டு அழைத்து வருமாறு அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், ஈரானில் உள்ள குவோம் என்ற இடத்தில் சிக்கி தவித்த இந்தியர்களில் 500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு இருப்பதாகவும், 250 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்களை அங்கிருந்து உடனடியாக அழைத்து வர இயலவில்லை என்றும், அவர்களுடன் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அவர்களை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், நிலைமை ஓரளவு சீரடைந்ததும் 250 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் துஷார் மேத்தா கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ் ஹெக்டே வாதாடுகையில், ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்ற போதிலும், அவர்களையும் மற்றவர்களுடன் ஓட்டலில் தங்க வைப்பதால் அந்த நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

ஈரான் அரசின் தயவுடன் இந்தியர்கள் அங்கு இருப்பதாகவும் பணம், மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் தவிப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் ஹெக்டே, அவர்களை அழைத்து வந்து லே பகுதியில் தங்க வைக்கலாம் என்றும் கூறினார்.

அதற்கு துஷார் மேத்தா பதில் அளிக்கையில், ஏற்கனவே கணிசமான பேர் அழைத்து வரப்பட்டு லேயில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது அங்கு மற்ற இடங்களிலும் கொரோனா அறிகுறி காணப்படுவதால், நிலைமை ஓரளவு சீரடைந்ததும் ஈரானில் சிக்கி தவிப்பவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கண்காணித்து வரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன் உரிய பரிசோதனை நடத்தி அந்த 250 பேரையும் கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்