ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? வரும் 11 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படலாம் எனத்தகவல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தட்டது.

Update: 2020-04-08 07:03 GMT
புதுடெல்லி, 

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாகப் பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதி இரவு அறிவித்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றோடு 15 நாட்கள் ஆகிறது. ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர்.  ஆனால், இந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது. 

ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  15-வது நாளாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். தவிர்க்க முடியாத பணியைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள போதிலும் சிலர் அதை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதை காண முடிகிறது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது எப்படி? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.  

21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. அதற்குள் நோய்க்கிருமி பரவுவது கட்டுக்குள் வந்துவிடுமா? என்று தெரியவில்லை. இதனால், 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும், நிபுணர்களும் மத்திய அரசை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், அதுபற்றி மத்திய அரசு யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊரடங்கை நீட்டித்தால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று பல மாநிலங்கள் கருதுகின்றன.

இந்த நிலையில்,  ஊரடங்கு  தொடர்பாக வரும் சனிக்கிழமை(11 ஆம் தேதி) மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு,  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து  மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் எனத்தகவல்கள் கூறுகின்றன.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடி 2-வது முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநில முதல்வர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். 

பொருளாதாரம் மற்றும் அடிப்படை துறைகள் மறுஆக்கத்தை உறுதி செய்யும் வகையில், கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்தும் முடிவில் மத்திய அரசு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. 

மேலும் செய்திகள்