அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்
பாஜக தொகுதி விருப்பப் பட்டியல் அமித்ஷாவிடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகள் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர். தமிழக அரசியல் சூழல் குறித்தும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமித்ஷாவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக தொகுதி விருப்பப் பட்டியலும் அமித்ஷாவிடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனின் தொகுதி வாரியான பிரசார நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அழைப்பும் விடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.