மது விற்பனை மூலம் ரூ.2,350 கோடி வருமானம் ஈட்ட உத்தரபிரதேச அரசு முடிவு

உத்தரபிரதேசத்தில் சாதாரண வகை மதுபானம் முதல் பிரிமீயம் வகை மதுபானங்கள் வரை தரம் மற்றும் அளவை பொறுத்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-06 20:45 GMT
லக்னோ, 

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுமார் 40 நாட்களாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் மாநில அரசுகள் சமூக விலகலை கடைப்பிடித்து கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் ஆந்திர மாநில அரசு இவ்வளவு நாள் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது. இதை தற்போது பிற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கிவிட்டன. அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நடப்பாண்டில்(2020-21) ரூ.2,350 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று அம்மாநில நிதி மந்திரி சுரேஷ் கண்ணா தெரிவித்து உள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சாதாரண வகை மதுபானம் முதல் பிரிமீயம் வகை மதுபானங்கள் வரை தரம் மற்றும் அளவை பொறுத்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்