புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் எதிர்கட்சியினர் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - நிர்மலா சீதாராமன்

புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் எதிர்கட்சியினர் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2020-05-17 11:43 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.  வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.  ஊரடங்கை முன்னிட்டு வேலைவாய்ப்பின்றி, வருவாயும் இன்றி, கையில் இருந்த பணமும் செலவான நிலையில், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது என அவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், ஊரடங்கால் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பலர் சரக்கு வாகனங்களில் பயணித்தும், பலர் கால்நடையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றும் தங்களது ஊரை அடைகின்றனர்.  அவர்களில் சிலர் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என தங்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்கின்றனர்.

இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு ரெயில்களில் அவர்களை அனுப்பி வைத்து வருகிறது.  இது தவிர்த்து அவர்களுக்கான உணவு தேவையையும் பூர்த்தி செய்கிறது.  இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை அடைந்த திருப்தியில் உள்ளனர்.  அவர்களுக்கான பயண செலவுகளை ஏற்கவும் சில மாநில அரசுகள் முன்வந்தன.

எனினும், ஊருக்கு திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் நிலையில், அதனை தவிர்க்க, சிலர் கிடைத்த வாகனங்களை பிடித்து பயணம் செய்கின்றனர்.

இந்தநிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார். அதன்படி மக்களுக்கான ஐந்தாம் கட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் இன்று பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 

அப்போது அவரிடம் டெல்லி அருகே நடந்து சென்று கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன்,

ராகுல் காந்தி, நாடகம் ஆடுகிறார். இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கும் வெளிமாநிலத்தவர்களிடம் உரையாடி நேரத்தை வீணப்படிப்பதை விட அவர்களின் கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர்களுடன் நடந்து செல்லலாம். 

அத்துடன் காங்கிரஸ் ஆளும் இடங்களிலெல்லாம் அதிக ரெயில்களைப் பெற்று வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல உதவ வேண்டும்.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் எதிர்க்கட்சியிடம் சொல்ல விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.   நான் சோனியா காந்தி ஜியிடம் கேட்கிறேன், நம்முடைய புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்