ஊரடங்கால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்ப்பு- மத்திய அரசு

இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-05-23 02:50 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தென்படத்தொடங்கியதும்,  கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 3-வது மற்றும் 4-வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 60 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.  இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி  1,18,447- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 3,583- பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்தியாவில் சுமார் 14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினரும் கொரோனா சூழலை எதிர்கொள்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவருமான விகே பால், மத்திய புள்ளியில் திட்ட அமலாக்கத்துறை செயலர் பிரவீன் ஸ்ரீவத்ஸ்வா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது விகே கோபால் கூறியதாவது:-

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் நாட்டில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் 80 சதவிகிதம் பேர் 5 மாநிலங்களில்தான் உள்ளனர்.  நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், சுமார்  14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனர். சுமார் 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் வரையிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன” என்றனர். 

மேலும் செய்திகள்