இந்தியாவில் ஆகஸ்டு தொடக்கம் வரை ரெயில் சேவை தொடங்காது என சூசக தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக நிறுத்தப்பட்ட ரெயில் சேவை ஆகஸ்டு தொடக்கம் வரை தொடங்காது என சூசக தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2020-06-24 11:11 GMT
புதுடெல்லி,

கொரனோ வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் 25ந்தேதி முதல் பயணிகள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை இந்திய ரெயில்வே நிர்வாகம் நிறுத்தியது. 

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலர் சிக்கி தவித்தனர்.  இதன்பின்னர் மத்திய அரசின் உத்தரவின்படி, அவர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்காக, கடந்த மே 1ந்தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரெயில்களை ரெயில்வே இயக்க தொடங்கியது.  இதுவரை 4 ஆயிரத்து 450க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரெயில்களை இயக்கி 60 லட்சத்திற்கும் கூடுதலான மக்களை அழைத்து சென்று விட்டுள்ளது.

கடந்த மே 12ந்தேதி முதல் 15 ஜோடி சிறப்பு ஏ.சி. ரெயில்களையும், கடந்த 1ந்தேதி முதல் 200 காலஅட்டவணை ரெயில்களையும் இந்திய ரெயில்வே இயக்கி வருகிறது.  

இந்நிலையில், நாட்டில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டண தொகையை திரும்ப தருவது என ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, நடப்பு ஜூன் 30ந்தேதி வரை பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்கமான ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, பயணிகளுக்கு முழு பணமும் திரும்ப தருவது என்று முடிவு செய்து கடந்த மே 14ந்தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேபோன்று, கடந்த ஏப்ரல் 14ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக, வழக்கமான பயணிகள் ரெயில்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரெயில் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது.  முன்பதிவு செய்ததற்கான முழு கட்டண தொகையும் திரும்ப தரப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இந்திய ரெயில்வேயின் முன்பதிவு விதிகளின்படி, அனைத்து வகுப்புகள் மற்றும் அனைத்து ரெயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பே பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சூழலில், ரெயில்வே வெளியிட்ட டிக்கெட் ரத்து அறிவிப்பின்படி, ஆகஸ்டு 2வது வாரம் வரை ரெயில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளின் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு விடும்.  அதற்கான கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.  இதனால், ரெயில்வே நிர்வாகம் கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு ஆகஸ்டு வரை ரெயில் சேவையை தொடங்காது என்ற சூசக தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்