உர்ஜித் படேல் ராஜினாமாவிற்கு மோடி காரணம் ராகுல்காந்தி தாக்கு: பாஜக பதிலடி

உர்ஜித் படேல் ராஜினாமாவிற்கு மோடி தான் காரணம் ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த பாஜக ஒருவரியில் எழுதுவதால் நீங்கள் பொருளாதார வல்லுநர் ஆகிவிட முடியாது என கூறியுள்ளது.

Update: 2020-07-29 11:09 GMT
புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் ஆளுநராக பதவியேற்றவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்.
இந்நிலையில் உர்ஜித் படேல் சமீபத்தில் 'ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர்' எனும் நூல் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ' திவால் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டதால் அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலுக்கும் , மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசு செய்ய இருந்த திருத்தங்களுக்கு உர்ஜித் படேல் உடன்படவில்லை. இதனால் அவர் பதவியிருந்து விலக நேர்ந்தது' எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில்,

வங்கி முறையைச் சீரமைக்க முயன்றதற்கு உர்ஜித் படேல் தனது பதவியை இழக்க நேர்ந்தது. ஏன் தெரியுமா, வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களைப் பின்தொடர்ந்து பெற பிரதமர் விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக சார்பில் பதிலடி தரப்பட்டது. பாஜக தகவல் தொடர்பு பொறுப்பாளர் அமித் மாளவியா ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்க பதிவை டேக் செய்து பதிவிட்ட கருத்தில், பரபரப்பாக ஏதாவது ஒருவரியில் எழுதுவதால் நீங்கள் பொருளாதார வல்லுநர் ஆகிவிட முடியாது. ராகுல் காந்தியின் ஆலோசகர்கள் அவரைப் போலவே திறமையாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்