ராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி: ஒரு மாத பரபரப்பு முடிவுக்கு வந்தது

ராஜஸ்தான் சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது.

Update: 2020-08-14 22:29 GMT
ஜெய்ப்பூர், 

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே நடந்து வந்த அதிகார மோதல் கடந்த மாதம் பகிரங்கமாக வெடித்தது. எனவே முதல்-மந்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு சபாநாயகர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதனால் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி நிலவி வந்தது.

அதேநேரம் சச்சின் பைலட்டிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கட்சியில் அவருக்கு இருக்கும் மனக்குறைகளை தீர்க்க சிறப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட அவர் மீண்டும் காங்கிரசின் மைய நீரோட்டத்தில் இணைந்தார். நேற்று முன்தினம் முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது பகையை மறந்து இருவரும் கை குலுக்கிக்கொண்டனர். பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கட்சியின் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மாநில சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் நேற்று காலையில் தொடங்கியது. ஆனால் காலையில் திடீரென கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். அவர்களால் குறித்த நேரத்துக்குள் சட்டசபைக்கு வர முடியவில்லை.

எனவே சட்டசபையை மதியம் 1 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். பின்னர் 1 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது அனைத்து உறுப்பினர்களும் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

சட்டசபை தொடங்கியதும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை சட்டசபை விவகாரத்துறை மந்திரி சாந்தி தரிவால் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, குதிரை பேரம் மூலம் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்றதாகவும், ஆனால் அவர்களால் முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜேந்திர ரத்தோர் பதிலளித்து பேசினார். அவர் கூறுகையில், யானை பேரத்தில் ஈடுபடுபவர்கள் குதிரை பேரம் பற்றி பேச தகுதி இல்லை எனக்கூறினார். பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை காங்கிரசில் இணைத்ததை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பின்னர் இந்த தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசினார். அவரும், தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சித்ததாக குற்றம் சாட்டியதுடன், நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், எந்த விலை கொடுத்தாவது ஆட்சியை பாதுகாப்பேன் என்றும் தெரிவித்தார்.

முடிவில் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அரசில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. பின்னர் சட்டசபை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பிலும், எதிராக வாக்களிக்குமாறு பா.ஜனதா சார்பிலும் அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 200 உறுப்பினர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 107 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 72 உறுப்பினர்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்