விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “பேடிஎம்” செயலி நீக்கம்

விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “பேடிஎம்” (Paytm) செயலி நீக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-18 10:30 GMT
புதுடெல்லி,

இணைய வழி பணப்பரிமாற்றம், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு செயலியான “பேடிஎம்” (Paytm) விதிமீறல் காரணங்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், இந்த தகவலை பேடிஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

அதில், பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் புதிய அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், “எங்களது சேவை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும், நீங்கள் வழக்கம்போல் பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்” என்றும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கான பணப்பரிவர்த்தனைக்கு பல இடங்களில் தடை உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் உருவாக்கிய புதிய விதிகளில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு தங்கள் தளத்தில் அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. இதற்கிடையில் பேடிஎம் செயலியை சட்டவிரோத சூதாட்ட பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தியதாகவும், பேடிஎம் செயலி அந்த குறைபாட்டை சரி செய்யாதவரை ஆண்ட்ராய்டு தளத்தை அந்நிறுவனம் பயன்படுத்தாதவகையில், கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்