கொரோனா பாதிப்பு என பொய் கூறி மனைவியை பிரிந்து சென்று காதலியுடன் வசித்த கணவன்

மராட்டியத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என பொய் கூறி மனைவியை விட்டு பிரிந்து சென்று காதலியுடன் வசித்து வந்த கணவனை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

Update: 2020-09-18 11:24 GMT
புனே,

மராட்டியத்தில் நவிமும்பை நகரில் வஷி பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய நபர் கடந்த ஜூலையில் காணாமல் போய் விட்டார்.  அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  அவருடைய மோட்டார் சைக்கிள் சாலையில் தனியாக நின்றுள்ளது.  இதனால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதில், கடந்த ஜூலை 24ந்தேதி தொலைபேசியில் பேசிய கணவர் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று கூறினார்.  அதனால் சாக போகிறேன் என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பினை துண்டித்து விட்டார்.  வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் கொரோனா பாதிப்பு மையங்கள், மருத்துவமனைகள் என்று பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.  பல மாதங்களாக அந்நபரை தேடி அலைந்துள்ளனர்.  தெரிந்த நபர்களிடம் விசாரித்துள்ளனர்.  மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், அவரை கண்டறிவதில் கூடுதல் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்நபர் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.  கடந்த வாரம் போலி அடையாளத்துடன் வாடகை வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார்.  அவரது போன் அழைப்பு அவர் இந்தூரில் வசிக்கிறார் என தெரியப்படுத்தியது.

போலீசார் உடனடியாக அங்கே சென்று அவரிடம் விசாரித்ததில் அவர், தன்னுடைய காதலியுடன் வசித்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.  தனக்கு கொரோனா என பொய் சொல்லி மனைவியை ஏமாற்றி விட்டு காதலியுடன் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதன்பின்னர் அவரை நவிமும்பைக்கு திரும்ப அழைத்து வந்து அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்து உள்ளனர்.  கொரோனா பாதிப்பு என கூறி மனைவியிடம் இருந்து பிரிந்து சென்ற நபர் தனது காதலியுடன் வசித்து வந்தது அந்த பகுதியில் வசிப்போரிடையே பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்