வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்

வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரட்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஒருவார அவகாசம் வழங்கியுள்ளது.

Update: 2020-10-05 06:55 GMT
புதுடெல்லி,

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அதை ரத்து செய்யக்கோரியும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந் தேதி விசாரணை நடைபெற்றது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், ‘மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான தவணையுரிமை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக அரசின் உயர்மட்ட அளவில் எடுக்கப்படும் முடிவு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவு அடங்கிய பிரமாண பத்திரம் அக்டோபர் 1-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சக சார்பு செயலாளர் ஆதித்யா குமார் கோஷ் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில்,  சிறிய அளவிலான கடன் பெற்றவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. 

2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வி கடன் பெற்றவர்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் புரிய 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனிநபர்கள், 2 கோடி ரூபாய் வரையிலான கன்ஸ்யூமர் கடன் பெற்றவர்கள், 2 கோடி ரூபாய் வரை கிரெடிட் கார்டு நிலுவை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை (வட்டிக்கு வட்டி வசூலிப்பது) தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது” இவ்வாறு  பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது..  

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில்  விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு  ஒருவார கால அவகாசம் வழங்குவதாகவும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்  எனவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்