அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை; சுப்ரீம் கோர்ட்டு கவலை

அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2020-10-06 22:16 GMT
புதுடெல்லி,

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க போதிய சிறப்பு கோர்ட்டுகளை ஏற்படுத்த வேண்டும். குற்ற வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று, ஐகோர்ட்டுகள் செயல்திட்டங்கள் அளித்துள்ளதையும், சிறப்பு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளையும் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கீல் வி.மோகனா ஆகியோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரங்களை ஆராய்ந்து ஒப்பிட்டு வருகிறோம். எனவே காலஅவகாசம் தேவை என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘நாடு முழுவதும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கு குறித்த விவரங்களை முழுவதுமாக மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. அவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் பரிந்துரைகளையும், செயல்திட்டத்தையும் ஐகோர்ட்டுகள் தரவும், அவற்றை உரிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்க ஏதுவாக வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்கிறோம். அரசியல் நெருக்கடிகளால் சில நேரங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது’ என தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்தாய் குறுக்கிட்டு, ‘குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இதற்கு நீதிபதிகள், ‘முதலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க போதிய சிறப்பு கோர்ட்டுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்’ என்றனர்.

நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4,859 குற்ற வழக்குகளும், தமிழ்நாட்டில் 361 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன என சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்