உலகின் மிக மதிப்புமிக்க இந்திய ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மாறியது

ரிலையன்சுக்கு பிறகு உலகின் மிக மதிப்புமிக்க இந்திய ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மாறியது

Update: 2020-10-09 12:30 GMT
புதுடெல்லி:

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், வெள்ளிக்கிழமை அசென்ச்சர்(Accenture) நிறுவனத்தை முந்தி, உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக மாறியது. 

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிறகு சர்வதேச அளவில் இந்த உச்சத்தை எட்டிய இரண்டாவது நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மட்டுமே. அக்டோபர் 8ஆம் தேதியின் தரவுகளின் படி,அசென்ச்சர் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 143.1 பில்லியன் டாலர்கள். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 144.7 பில்லியனாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குப் பிறகு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பீட்டை எட்டிய இரண்டாவது இந்திய நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்பது மதிப்பிற்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, கடந்த திங்களன்று இந்த நிறுவனம் மற்றொரு பெரிய சாதனையையும் பதிவு செய்தது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளினால், மும்பை பங்குச் சந்தையில் (BSE) டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு  69,082.25 கோடி ரூபாய் உயர்ந்து, வர்த்தகத்தின் முடிவில் ரூ .10,15,714.25 கோடியை எட்டியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்குப் பிறகு ரூ .9 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பீட்டைக் கொண்ட இரண்டாவது இந்திய நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கடந்த மாதம் ஆனது. சந்தை மூலதனத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் இரண்டாவது மிக மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்