பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்.

Update: 2020-12-15 10:44 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

இதனிடையே கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது கொரோனா தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் உரையாடினர். அப்போது இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு, இந்தியாவுக்கு வருமாறு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. போரிஸ் ஜான்சன், தனது பங்கிற்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஜி -7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவலில், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார் என்று தெரிவித்தார். இதன்மூலம் இந்திய குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் கடைசியாக 1993-ம் ஆண்டு கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர் ஆவார்.

மேலும் செய்திகள்