இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் வந்தவர்களுக்கு கட்டாய தனிமை: உறவினர்கள் ஆவேசம்

இங்கிலாந்து நாட்டில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை கட்டாய தனிமைப்படுத்துதலுக்காக ஓட்டலுக்கு அழைத்து சென்றதற்காக உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர்.

Update: 2020-12-22 00:55 GMT
மும்பை,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த நிலையில் வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அதேபோல், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனையடுத்து, இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், மும்பை மாநகராட்சி ஆணையாளர் இக்பால் சிங் சஹால் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, செவ்வாய் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு பின்னர் இங்கிலாந்து நாட்டில் இருந்து எந்த விமானமும் வந்து இறங்காது.

விமானத்தில் வரும் பயணிகள் தனிமைப்படுத்துதலுக்காக கொண்டு செல்லப்படுவார்கள்.  அறிகுறியற்ற நபர்கள் ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.  கொரோனா தொற்றுள்ள நபர்கள் ஜி.டி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என நேற்றிரவு கூறினார்.

இதன்படி, இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அழைத்து செல்வதற்காக அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர்.  ஆனால், விமான பயணிகளை கட்டாய தனிமைப்படுத்துதலுக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.  இதனால், பயணிகளின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்பொழுது, அரசு எங்களிடம் முன்பே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும்.  அதிகாரிகள் அனுமதித்த பின்பே விமானத்தில் பயணிகள் ஏறியுள்ளனர்.  இல்லையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் செய்திகள்