பஞ்சாப் ஓட்டலை முற்றுகையிட்ட விவசாயிகள் ; பின்புறம் வழியாக தப்பிய பா.ஜனதா நிர்வாகிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பா.ஜனதா நிகழ்ச்சி நடைபெற்ற பஞ்சாப் ஓட்டலை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டக்கார்களிடம் இருந்து தப்பிக்க பின்புறம் வழியாக பா.ஜனதா நிர்வாகிகள் நழுவினர்

Update: 2020-12-25 15:24 GMT
Representational image
அமிர்தசரஸ்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் பக்வார  பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  பா.ஜனதா சார்பில், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.  ஓட்டல் முன்பு பாரதி கிசான் யூனியனை (தோபா) ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஓட்டல் ஒரு பா. ஜனதா  நிர்வாகி ஒருவருக்கு  சொந்தமானது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர், அவர் கால்நடைகள் மற்றும் கோழி தீவனங்களை விற்கும்  ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அவரது நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்க போவதாக விவசாயிகள்  கூறினர்.

தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் கிர்பால் சிங் முசாபூர் தலைமையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓட்டலுக்கு வெளியே முற்றுகையிட்டனர்.

பாஜகவின் மகளிர் அணி  மாவட்டத் தலைவர் பாரதி சர்மா உள்பட பல பா.ஜனதா நிர்வாகிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள  ஓட்டலுக்குள்ளே  சென்றவர்கள் போலீஸ்  பாதுகாப்புடன் ஓட்டலின்  பின்புறவழியாக நழுவி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பா.ஜனதா  தலைவர்கள் விவசாயிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும்  முசாபூர் குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓட்டலுக்கு வெளியே ஒரு கம்பத்தில் விவசாய சங்க  கொடியை ஏற்றினர், அது அகற்றப்பட்டால் அல்லது எதிர்காலத்தில் ஓட்டலில் ஏதேனும் பா.ஜனதா நிகழ்ச்சிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டால், விவசாயிகள் ஓட்டல் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவர்  என்று உரிமையாளரை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்