கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை: சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

Update: 2021-01-05 20:22 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 2 தடுப்பூசிகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்றும் அப்படி எந்தவிதமான தடையும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இதுகுறித்து கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இது முற்றிலும் தெளிவானது. நான் மத்திய அரசு என்று கூறும் போது 3 அமைச்சகங்கள் உள்ளன. சுகாதார அமைச்சகம், வணிக அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றுடன் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை ஆகியவையும் உள்ளன.

இந்த அமைப்புகள் நெருக்கடியான காலத்தில் இதுபோன்ற தடை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப முற்படும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே ஊடக நண்பர்களுக்கான வேண்டுகோள்’’ என கூறினார்.

மேலும் செய்திகள்