மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியர் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-01-16 15:54 GMT
ஹாசன்:


கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பட்டப்பகலில் மது போதையில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் ஹாசன் அருகே ஹுவினஹள்ளி காவல் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் ஹாசன் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையானவரின் உடலை பார்வையிட்டனர். பிணத்தின் அருகில் மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் சிதறி கிடந்தன. எனவே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். 

மின்வாரிய ஊழியர்

இதைதொடர்ந்து கொலையானவரின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையானவர் யார் என்பது அடையாளம் தெரியவந்தது. 

அதாவது, கொலையானவர் ஹாசன் தாலுகா அரேகல்லு ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 36) என்பதும், இவர் மின்வாரிய அலுவலத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டதும், அப்போது குடிபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. 

நண்பர்களுக்கு வலைவீச்சு

மேலும் இந்த தகராறு முற்றவே சந்தோசை அவரது நண்பர்களே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக ஹாசன் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தலைமறைவாக உள்ள சந்ேதாசின் நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்