காருக்கு வழிவிடுமாறு லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்களால் பரபரப்பு

காருக்கு வழிவிடுமாறு லாரி டிரைவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-01-31 03:02 GMT
மும்பை, 

எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த இம்தீயாஸ் ஜலில் எம்.பி. டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் காரில் செல்லும் சிலர் துப்பாக்கிகளை காட்டி தங்களது வாகனத்துக்கு வழிவிடுமாறு லாரி டிரைவர் ஒருவரை மிரட்டுகின்றனர்.

மேலும் அந்த காரில் சிவசேனா கட்சியின் லோகோவான உறுமும் புலியின் படம் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து இம்தீயாஸ் ஜலில் சிவசேனா கட்சியினர் தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிகளை காட்டி தங்களது காருக்கு வழிவிடுமாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதாக கூறியிருந்தார். மேலும் அவர் அந்த வீடிேயா பதிவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உள்துறை மந்திரி, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை டேக் செய்து இருந்தார். இதைதொடர்ந்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில் சம்பவம் குறித்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்திடம் கேட்ட போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம், சம்மந்தப்பட்டவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

இதேபோல போலீசார் கூறும்போது, " குறிப்பிட்ட அந்த சம்பவம் மும்பை - புனே விரைவு சாலையில் கொப்போலி அருகே நடந்து உள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளோம். காரின் நம்பரை வைத்து அதில் சென்றவர்கள், லாரி டிரைவரிடம் துப்பாக்கிகளை காட்டியவர்களை தேடி வருகிறோம் " என்றனர்.

மேலும் செய்திகள்