டெல்லியில் குடியரசு தினத்தன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை; டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

டெல்லியில் குடியரசு தினத்தன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-02-02 18:42 GMT
குடியரசு தினத்தன்று வன்முறை
டெல்லியில் குடியரசு தினத்தன்று, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை காட்சிகள் அரங்கேறின. தடுப்பு வேலிகள் தகர்க்கப்பட்டன. போலீசாருடன் விவசாயிகள் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிற கம்பத்தில் மதக்கொடி, விவசாய சங்கக்கொடி ஏற்றப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறார்கள்.

டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
இந்த தருணத்தில், ஹர்மன்பிரீத் சிங் என்ற சட்ட பட்டதாரி, வக்கீல்கள் ஆஷிமா மண்ட்லா, மந்தாகினி சிங் ஆகியோர் மூலம் பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தொடுத்தார். அதில், டெல்லி வன்முறையில் 22 வழக்குகள் பதிவு செய்து, 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதால் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரை கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர் சார்பில் வக்கீல் ஆஷிமா மண்ட்லா வாதிடும்போது, “கைது மெமோக்களில் கையெழுத்திடப்படவில்லை. கைது செய்தது பற்றி அவர்களின் குடும்பத்தினரிடம் தகவல் சொல்லவில்லை, மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படவில்லை. இது சட்டவிரோத காவலில் வருகிறது” என வாதிட்டார்.

வழக்கு தள்ளுபடி
ஆனால் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இது பொது நல வழக்கு அல்ல, விளம்பரம் தேடும் வழக்கு என கண்டித்தனர்.அத்துடன், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின்படி, டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்