உத்தரகாண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்க பிரதமர் மோடி ஒப்புதல்

உத்தரகாண்ட் பனிச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Update: 2021-02-07 15:37 GMT
புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது.  உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்தது.

உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் தேசிய அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.  இதனருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி கொண்டனர்.  ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி, உத்தரகாண்ட் பனிச்சரிவு விபத்து பற்றி மாநில முதல் மந்திரி ராவத்திடம் 2 முறை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து உள்ளார்.  அரசால் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ராவத்திடம் உறுதி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உத்தரகாண்டின் சமோலி பகுதியில் பனிச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கவும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்