வருமான வரி சோதனையில் மதுபானம் தயாரிப்பு நிறுவனம் ரூ.878 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

பெங்களூருவில் மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் ரூ.878 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-12 20:31 GMT
கோப்பு படம்
பெங்களூரு:

பெங்களூருவில் மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் ரூ.878 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனை

  பெங்களூருவில் கோடேஸ் நிறுவனம் மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரித்துறைக்கு முறையாக வரி செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, கடந்த 9-ந் தேதி அந்த நிறுவனத்தின் உரிமையாளர், அவரது உறவினர் வீடு மற்றும் அலுவலகங்கள் என ஒட்டு மொத்தமாக 26 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

  இந்த சோதனையின் போது நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருந்தனர். இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.

ரூ.878 கோடி வரிஏய்ப்பு

  அதாவது அந்த நிறுவனம் ரூ.878 கோடி வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்திருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மதுபான நிறுவனத்துடன் சேர்ந்து, கோடேஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. கேரள நிறுவனத்துடன் ரூ.78 கோடிக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ரகசியமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலி ஆவணங்களை அந்த நிறுவனம் தயாரித்து வைத்திருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  குறிப்பாக தன்னுடைய வீட்டு வேலைக்காரர் உள்பட 35 நபர்களின் பெயரில் ரூ.150 கோடிக்கு பினாமி பெயரில் சொத்துகளை எழுதி வைத்திருந்ததும், அவர்களது வங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மதுபான நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, மேலும் தகவல்களை பெறுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்