கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி 19 ஆண்டுகளுக்கு பின் கைது

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 19 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-02-16 22:23 GMT
கோத்ரா,

குஜராத்தில் உள்ள கோத்ரா ரெயில் நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ந்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சில மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பல ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.  இதில், 58 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து குஜராத்தில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.

ரெயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 5 பேர் வெவ்வேறு புலனாய்வு அமைப்புகளால் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.  இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி 19 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி எஸ்.பி. லீனா பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சபர்மதி ரெயில் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்கள் கோத்ரா ரெயில்வே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அவர்களில் முக்கிய குற்றவாளியான ரபீக் உசைன் பட்டுக் என்பவரை கோத்ரா நகர சிறப்பு அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.  இந்த நபர் கடந்த 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்.  பல்வேறு கட்டுமான இடங்களில் சின்ன சின்ன வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்