டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் மாநாடு; கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் மாநாடு நடத்த கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Update: 2021-02-19 22:49 GMT
பெங்களூரு,

இது தொடர்பாக கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் பசுமை படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் 87 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கர்நாடகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்ட களத்தில் 130-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரியும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) சிவமொக்கா, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹாவேரி, நாளை மறுநாள் (22-ந் தேதி) பாகல்கோட்டை ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து விவசாய சங்கங்களும் கலந்து கொள்கின்றன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்