கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; அரை நிர்வாண போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-20 09:28 GMT
புதுடெல்லி,

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது.  இந்த நிலையில், சமையல் செய்வதற்கு உதவும் கியாஸ் சிலிண்டரின் விலை டெல்லியில் உயர்த்தப்பட்டது.

டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் ஒன்று ரூ.50 உயர்ந்து இனி ரூ.769 ஆக விற்பனை செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்த மாதத்தில் இது 2வது விலை உயர்வு அறிவிப்பு ஆகும்.  மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 4ந்தேதி மெட்ரோ நகரங்களில் ரூ.25 உயர்ந்தது.  இதனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்தது.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பினர் சிலர் சாலையில் பாரம்பரிய மரஅடுப்புகளை கொண்டு சமையல் செய்து, கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.  இதேபோன்று, இளைஞர் காங்கிரசை சேர்ந்த சிலர் தங்களது மேலாடைகளை கழற்றி, கோஷங்களை எழுப்பியபடி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்