உள்நாட்டில் ரூ.70,221 கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.70,221 கோடிக்கு உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-23 08:38 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், ‘மத்திய பட்ஜெட்டின் ஆதாயங்களை பாதுகாப்புத்துறையில் திறம்பட செயல்படுத்துதல்’ என்ற தலைப்பின் கீழ் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து அவர் விளக்கினார். 

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது;-

“உள்நாட்டில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம் பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து நாடு தன்னிறைவு அடைவதை நாங்கள் ஆதரித்து வருகிறோம். 

2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.70,221 கோடிக்கு உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படும். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். மேலும் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். 

நமது ராணுவத்தை நவீனமயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 130 பில்லியன் அமெரிக்க டாலர்களை மத்திய அரசு செலவிடவுள்ளது. அண்மையில் உள்நாட்டிலேயே 83 எல்சிஏ எம்கே1ஏ விமானங்களைத் தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.48 ஆயிரம் கோடியாகும்.

மேலும் இலகு ரக ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஆர்டரும் விரைவில் வழங்கப்படும்.”

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

மேலும் செய்திகள்